மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 68 கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 68 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் சுகாதார பிரிவில் 16 பேரும் செங்கலடி சுகாதார பிரிவில் 15 பேரும், ஆரையம்பதி சுகாதார பிரிவில் 11 பேரும், பட்டிப்பளை சுகாதார பிரிவில் 8 பேரும், காத்தான்குடி சுகாதார பிரிவில் 5 பேரும், களுவாஞ்சிகுடி பகுதியில் 4 பேரும், ஓட்டமாவடி சுகாதார பிரிவில் 3 பேரும், மட்டக்களப்பு சுகாதார பிரிவில் இரண்டு பேருமாக கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 3935 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவிட் தொற்றின் மூன்றாவது அலை காரணமாக 2952 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 48 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை கடந்த 6 தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் 19959 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் குறைந்தளவிலேயே வழங்கப்படுகிறது.

பயணத்தடை அமுலில் உள்ள போதிலும் மக்களின் நடமாட்டம் மிகவும் அதிகளவிலேயே காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here