பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதியில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் விற்பனைகளை தடுக்கும் வகையில் மதுவரித்திணைக்களத்தினால் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இக்காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் போதைப்பொருள் கடத்தல், விற்பனை, உற்பத்தி என்பனவற்றினை தடுக்கும் வகையில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த மூன்று தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாரியளவில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட இடமொன்றும் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையார் ஏ.தர்மசீலன் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரி அத்தியட்சகர் எஸ்.ரஞ்சனின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி நியூட்டன் அவுஸ்கோனின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்திலிருந்து ஐந்து பரல்களில் இருந்து 4 இலட்சத்து 30ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் கோடா கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரி அத்தியட்சகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்புஸ்குடா பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதேபோன்று களுவன்கேணி,கருவப்பங்கேணி,குளத்தூர் போன்ற பகுதிகளில் கசிப்பு விற்பனை,சட்ட விரோத கள் விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here