மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி இடம் பெற உள்ள நிலையில் கோவிட் தொற்றின் காரணமாகத் திருவிழாவிற்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தர அனுமதி இல்லை என மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் இன்றையதினம் சனிக்கிழமை (12) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி (02-07-2021) இடம்பெற உள்ளது. இவ்வருடம் எமக்குச் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக ஆடி மாத திருவிழாவை நடாத்த வேண்டியுள்ளது.

எனவே இம்முறை யாத்திரிகர்கள், பக்தர்கள் மருதமடு அன்னையின் ஆடி மாதம் 2 ஆம் திகதி இடம் பெற உள்ள திருவிழாவிற்கு மன்னார் மறை மாவட்டத்தைத் தவிர்ந்த ஏனைய வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தர அனுமதி இல்லை என்பதை அறியத்தருகின்றோம்.

பக்தர்கள் வழமையாக ஆயிரக்கணக்காக  குறித்த திருவிழாவிற்கு வந்து மருதமடு அன்னையைத் தரிசித்துச் செல்வார்கள்.

ஆனால் இவ்வருடம் கோவிட் வைரஸ் தொற்றின் காரணமாக இந்த நாட்டிலே இருக்கக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே பல்வேறு கட்டுப்பாடுகள் அரசாங்க அதிகாரிகள் ஊடாகவும்,சுகாதார அதிகாரிகள் ஊடாகவும் எமக்குத் தரப்பட்டுள்ளது.

எனவே நாங்கள் எதிர் வரும் யூன் மாதம் 23 ஆம் திகதி (23-06-2021) மடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றத்தினை நடாத்துவோம். அதனைத் தொடர்ந்து நவ நாள் திருப்பலிகளும் இடம் பெறும்.

ஆனால் குறித்த நவ நாள் திருப்பலிகளுக்கு 15 நபர்கள் மாத்திரமே கலந்து கொள்ள முடியும். அதன் பின்னர் எதிர் வரும் ஆடி மாதம் 2 ஆம் திகதி (02-07-2021) காலை திருவிழா திருப்பலி திருத்தலத்தின் முன் பக்கத்தில் இருக்கும் இடத்திலிருந்து திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.

திருப்பலியை தொடர்ந்து திருச் சொரூப ஆசீர்வாதமும் வழங்கப்படும். ஆனால் நாங்கள் அன்றைய தினம் அதிகமான திருப்பலிகளை நடாத்தினாலும், ஒவ்வொரு திருப்பலிகளுக்கும் ஆகக்கூடியது 30 பேர் மாத்திரமே பங்கு கொள்ள முடியும்.

மேலும் வெளியிலிருந்து ஆலயத்திற்கு வருகின்றவர்கள் மடு சந்தியில் வைத்து அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதன் பின்னரே ஆலயத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். திருவிழா திருப்பலி காலையில் இடம் பெறும் போது அதனை நாங்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாக அஞ்சல் செய்ய எதிர் பார்த்துள்ளோம்.

நீங்கள் வீடுகளிலிருந்தே தொலைக்காட்சி ஊடாக திருவிழாவில் பங்கெடுக்க முடியும். திருப்பலியை தொடர்ந்து மேலும் 5 திருப்பலிகள் அன்றைய தினம் இடம் பெறும். அதற்கு மன்னார் மறை மாவட்டத்தில் வெவ்வேறு மறைக்கோட்டத்திலும் இருந்து மக்களை அழைத்து வருவார்கள். ஆகவே இந்த கட்டுப்பாட்டுக்களை மக்கள் தயவு செய்து ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

மருதமடு அன்னையிடம் இவ்வருடம் விசேடமாக மன்றாடிக் கேட்போம் அவருடைய வலிமையுள்ள பரிந்துரையினால் இந்த கொள்ளை நோய் முற்று முழுதாக எம்மிடம் இருந்து ஒழிக்கப்பட்டு நாங்கள் இந்த நாட்டிலே விடுதலை பெற்ற மக்களாக மீண்டும் எமது வழமையான வாழ்க்கையை வாழக்கூடிய மக்களாக இருக்க எமக்கு மருதமடு அன்னை இறைவனிடமிருந்து அவசியமான அருளைப் பெற்றுத்தர வேண்டும் என்று மன்றாடுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here