முல்லைத்தீவு – நாயாற்று கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட குறித்த மீனவர் நாயற்று கடற்பரப்பில் ஒளிபாச்சி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடலில் ஒளிபாச்சி மீன்பிடித்தல் சட்டத்திற்கு முரணான தொழில் நடவடிக்கை என்றும் அவ்வாறு சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர் என்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொக்குளாய் பகுதியினை சேர்ந்த மீனவர் ஒருவர் நாயாற்று கடற்பரப்பில் ஒளிபாச்சி மீன்பிடித்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவரும், மீன்பிடிபடகும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மீனவர் மீது வழக்கு பதிவு செய்த கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.