அரசாங்கத்தின் பாடசாலை மைதான அபிவிருத்தித் திட்டத்தில் கிண்ணியா கல்வி வலய கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தையும் உள்ளடக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும்,
தங்களது விளையாட்டுத்துறை அமைச்சு கல்வி அமைச்சுடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள வலயக் கல்வி அலுவலக பிரிவுகளில் தலா ஒரு பாடசாலை மைதானத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமையையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 5 வலயக் கல்வி அலுவலகப் பிரிவுகளில் 4 வலயக் கல்வி அலுவலகப் பிரிவு பாடசாலை மைதானங்கள் அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து திருகோணமலை மாவட்ட மக்கள் பிரதி என்ற வகையில் எனது நன்றியை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மைதான அபிவிருத்தித் திட்டத்தில் திருகோணமலை மாவட்ட கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவு பாடசாலை மட்டும் விடுபட்டுள்ளது.
இங்கு கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தை அபிவிருத்தி செய்ய கல்வி அதிகாரிகள் சிபாரிசு செய்து உரிய அமைச்சுக்கு அனுப்பப்பட்டதாக அறிகின்றேன்.
எனினும், கிண்ணியா மத்திய கல்லூரி மைதானம் மட்டும் இதில் விடுபட்டுள்ளது. எனவே, இந்த அபிவிருத்தித் திட்டத்தில் இப்பாடசாலை மைதானத்தையும் உள்ளடக்க நடவடிக்கை எடுக்குமாறு இம்ரான் எம்.பி கேட்டுள்ளார்.