தமிழ் மக்களின் போராட்டம், நலிவுற்று போக வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றதென யாழ்.மாவட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் இன்பராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் இன்பராஜா மேலும் கூறியுள்ளதாவது,  “தற்போதைய அரசானது பதவியேற்று ஒரு வருட காலம் பூர்த்தி அடைந்துள்ள நிலையிலும், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளாகிய மீள் குடியேற்றம், காணாமலாக்கப்பட்டோர் விடயம், அரசியல் கைதிகளை விடுதலை போன்ற எந்தவித பிரச்சினைக்கும் தீர்வு முன்வைக்கப்படவில்லை.

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். அவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்

அதேபோன்று வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, போராடிக்கொண்டிருக்கின்றார்கள். மீனவ மக்கள் தங்களுடைய தொழில் பாதிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில், இந்த போராட்டம், நலிவுற்று போக வேண்டும் என்பதைதான் இந்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. அதற்கு சாதகமாகவே அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளுடைய நிலைப்பாடுகளும் காணப்படுகின்றன.

மேலும், மக்களுடைய கோரிக்கைகளை தீர்ப்பவர்களாக தமிழ் அரசியல்வாதிகள் இருந்தால் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபடலாம். ஆனால் அவ்வாறு செயற்படுவதில்லை. அவர்கள் தற்போதைய அரசாங்கத்தை அனுசரித்து, சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுகிறார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here