மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவிட்ரு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்கு, நேற்று (புதன்கிழமை) மாலை இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவிட்ரு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவனை சந்தித்த பிரான்ஸ் தூதுவர், மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
அத்துடன் மாநகரசபையின் செயற்பாடுகள், மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் தேவைப்பாடுகள், மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து தூதுவருக்கு மாநகர முதல்வரினால் விளக்கமளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தொழில்வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையிலான தொழில்பேட்டைகளை அமைப்பதற்கான முதலீட்டாளர்களை இங்கு அழைப்பது தொடர்பிலும் தூதுவருடன் முதல்வர் கலந்துரையாடினார்.