வவுனியாவில் அமைந்துள்ள ஆடைவிற்பனை நிலையங்களில் பெண்களின் உடைகளை விற்பனை செய்யும் பகுதிகளிற்கு பெண் ஊழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக வவுனியா நகரசபையின் உப தவிசாளர் சு.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள ஆடைவிற்பனை நிலையங்களில் பெண்கள் தொடர்பான ஆடைகளை விற்பனைசெய்யும் பகுதிக்கு பெண் ஊழியர்களயே நியமிக்கவேண்டும் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்ததுடன் நகரசபையிடமும் சிலர் வேண்டுகோள் முன்வைத்திருந்தனர்.
அதற்கமைவாக கலாசாரத்தை பேணிப்பாதுகாப்பதற்கும், பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தவிர்த்துகொள்வதற்கும் ஆடை விற்பனை நிலையங்களில் பெண்களின் ஆடைகளை விற்பனை செய்யும் பிரிவிற்கு பெண் ஊழியர்களை நியமிப்பதே சிறந்தது என நாம் தீர்மானித்துள்ளோம்.
இச்செயற்பாட்டால் பெண்கள் சந்திக்கும் சில அசௌகரியங்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள முடியும். அத்துடன் கலாசாரத்தை பாதுகாப்பதும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதுமே இதன் பிரதான நோக்கம்.
எனவே மிகவிரைவாக உரிய தரப்புகளுடன் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் வர்த்தகர்களினதும் ஒத்துழைப்புகளும் பெறப்படவுள்ளதுடன் இவ்விடயம் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வண்ணம் வவுனியா வர்த்தகசங்கம், வர்த்தகர்நலன்புரிசங்கம் ஆகியவற்றுடன் பேச்சுவார்தைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.