வவுனியாவில் பாடசாலை மாணவியிடம் பஸ்ஸில் தகாத முறையில் நடந்துகொண்ட இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று மாலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவ முகாமில் கடமைபுரியும் ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த 29 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய போது, பஸ்ஸில் வைத்து குறித்த இராணுவ சிப்பாய் மாணவியை அசௌகரியத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸார் கூறினர்.
செட்டிக்குளம் நோக்கி பஸ்ஸில் பயணித்த போதே மாணவி இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.
இதன்போது மாணவி கூச்சலிட்டதை அடுத்து இராணுவ சிப்பாய் தப்பியோட முயற்சித்துள்ளார்.
பஸ் சாரதியும் அதில் பயணித்த இளைஞர்களும் இராணுவ சிப்பாயைப் பிடித்து குருமன்காடு சந்தியிலுள்ள பொலிஸ் காவலரணில் ஒப்படைத்துள்ளனர்.
எனினும், சிறிது நேரத்தில் இராணுவ சிப்பாய் அங்கு இல்லை என தெரிவித்து பொலிஸாருடன் மக்கள் முறுகலில் ஈடுபட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு மக்கள் சென்றுள்ளனர்.
சந்தேகநபரான இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்ததை அடுத்து, பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குழுமிய மக்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.