வவுனியா குடியிருப்பு கலாசார மண்டப காணியை அரச திணைக்களங்களுக்கு வழங்குவதை உடன் நிறுத்துமாறு வவுனியா அரசாங்க அதிபருக்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தின் முழுவிபரம் வருமாறு:
வவுனியா, குடியிருப்பு கிராமம் நகரத்தின் மிகப்பழமையான கிராமாகும். தற்போது கலாசார மண்டபம் காணப்படுகின்ற காணியானது 1920ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்தே பிள்ளையார் கோவிலின் நிர்வாகத்தின் கீழ் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இங்கு பொதுத் தேவைக்கான கட்டடம் மற்றும் 1945ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து கோவிலின் திருவிழாக்கள் மேற்படி காணியில் நடாத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் 1990களில் அப்போதைய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் காணியில் கலாசார மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டது.
இதன்போது கட்டடம் அமைக்கப்பட்டதும் கோவில் நிர்வாகத்திடம் கையளிப்பதாக உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது.
துரதிஸ்ரவசமாக மக்கள் பயன்பாட்டிற்கு முன்னமே இராணுவத்தினரால் கையப்படுத்தப்பட்ட மேற்படி கட்டிடமும் காணியும் 2016ம் அண்டு வரை 26 வருடங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதியின் கவனத்திற்கு மேற்படி விடயம் கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து காணியும் கட்டடமும் அரசாங்க அதிபரிடம் 2016ல் கையளிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து 23.08.2016ம் திகதி கடித மூலம் குடியிருப்பு கோவில் நிர்வாகம் மேற்படி மண்டபத்தையும், காணியையும் கோவில் நிர்வாகத்திடம் கையளிக்குமாறு கோரியிருந்தது.
எனினும் முன்னைய மாவட்ட செயலாளரினால் காணியின் ஒருபகுதி கைப்பணி பொருட்கள் விற்பனைக்கான கட்டடமொன்று அமைக்கப்படுவதற்கு ஒதுக்கப்பட்டது.
எதிர்கால அபிவிருத்திக்காக காணி தேவைப்படாக இருந்தமையினால் காணியை வேறுதேவைக்கு வழங்க வேண்டாமென அரசாங்க அதிபரை நான் கோரியிருந்தேன்.
எனினும் குறிப்பிட்ட தேவைக்கு சிறிய அளவிலான காணியை வழங்க தீர்மானிக்கப்பட்டு கட்டட நிர்மாணப்பணிகள், ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மிகுதியாகவுள்ள காணியை வேறு எந்த பொது தேவைக்கும் வழங்கப்படமாட்டாதென முன்னாள் அரசாங்க அதிபரால் உறுதிமொழி வழங்கப்பட்டது.
எனினும் தற்போது காணியின் ஒருபகுதி ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக காணியில் பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.