இன்னும் சில காலங்களில் மாணவர்களை விட ஆசிரியர்கள் அதிகரிக்கக் கூடும் – முன்னாள் கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்

சில காலங்களில் மாணவர்களை விட ஆசிரியர்கள் அதிகரிக்கக் கூடும் நிலைமை இருக்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

வாகரை பால்ச்சேனை சன்றைஸ் அமைப்பினால் பல்கலைக் கழகம் சென்ற மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் கடந்த செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

நம்முடைய பல்கலைக் கழகங்கள் எல்லாம் மாணவர்களை பட்டதாரிகளாக வெளியேற்றுகின்ற அளவிலே தான் பெருமை மிக்கனவாக விளங்குகின்றன. பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறும் பட்டதாரிகள் ஆசிரியர்களாக ஆகுவதற்கு மட்டும் தான் தகுதி இருக்கின்றது என்கின்ற ஒரு அவல நிலை இங்கு இருக்கின்றது. இது மாற்றப்பட வேண்டும்.

இன்னும் சில காலங்களில் மாணவர்களை விட ஆசிரியர்கள் அதிகரிக்கக் கூடும் என்கின்ற நிலைமை இருக்கின்றது. அண்மையில் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் கூட தெரிவித்தார் இலங்கையின் கல்வித் திட்டம் மாற்றப்பட வேண்டும் என்று. பல்கலைக்கழகம் விட்டு மாணவர்கள் வெளியேறும் போது அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்குகின்ற விதத்தில் கல்வித் திட்டம் அமைந்திட வேண்டும் என்று நாட்டின் தலைவர் கவலை தெரிவிக்கின்ற அளவிற்கு இந்த நாட்டினுடைய கல்வித் திட்டம் இருக்கின்றது.

திட்டமிட்ட கல்வியைக் கொடுக்கின்ற நிலையில் இந்த அரசு தயாராக இல்லாத ஒரு நிலைமையும், கல்வி முறைமையை மாற்றிய அமைக்க வேண்டும் என்று நாட்டின் தலைமைகளே தெரிவிப்பதற்கான காரணம் என்னவென்றால் இந்த நாட்டினுடைய அரசியல் இந்த நாட்டு மக்களுடைய வாழ்வை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அடுத்து ஆட்சிக்கு வருவது எவ்வாறு, அவ்வாறு வருவதென்றால் இருக்கின்ற ஆட்சியை எவ்வாறு கவிழ்ப்பது என்கின்ற குறுகிய நோக்கத்துடனான அரசியலாகவே இருக்கின்றது.

இந்த நாட்டை ஒருமித்த நாடாகக் கொண்டு இந்த நாட்டு மக்கள் அனைவரும் இந்த நாட்டின் சொத்துக்கள் என்ற வகையில் இந்த நாட்டின் அரசியலாளர்கள் கருதவில்லை. மிக ஆற்றலுள்ள எமது இளைஞர்கள் சரியான வழியிலே வழிகாட்டப்பட்டிருந்தால் இந்த நாட்டினுடைய மிகப் பெரிய சொத்துக்களாக ஆகியிருப்பார்கள். அவ்வாறு வழிகாட்டத் தவறியது இந்த இலங்கையின் ஆட்சி. அதன் காரணமாகத் தான் அவர்கள் பல்வேறு விதங்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

தற்போது இந்த நாட்டின் அரும்பெரும் சொத்துக்களாக இருக்கின்ற மாணவர்களை இந்த நாட்டிற்குத் தேவையான விதத்திலே ஆக்கக் கூடிய செயற்பாடுகளுக்கு அரசு முன்வர வேண்டும். அவ்வாறு அரசு முன்வருவதற்கு இந்த நாட்டினுடைய மிகப் பெரிய நோயாக இருக்கின்ற பன்முகத் தன்மை மறந்த, பெருந்தேசிய வாதத்திற்கு ஊடாக செலுத்துகின்ற நிலைமைக்கு விடிவு காணப்பட வேண்டும். அது அரசியலாளர்களுடைய கடமை.

இந்த நாட்டினுடைய அரசியலாளர்கள் எந்த வகையில் இந்த நாட்டின் நோய்க்குத் தீர்வு காண வேண்டும் என்பது பற்றி இளைஞர்களே சிந்திக்க வேண்டும். இந்த நாடு ஒற்றையாட்சியை விட்டு கூட்டாட்சி நாடாக இருக்க வேண்டும். அதிகாரங்கள் எல்லா இடங்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும்.

அதிகாரப் பரவலாக்களின் மூலம் ஒவ்வொரு பிராந்தியங்களும் அதிகாரங்களைப் பெற வேண்டும் என்கின்ற முறையிலான கூட்டாட்சி என்கின்ற கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 1948ல் இருந்து இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கின்றது. அது செவிடன் காதிலே ஊதிய சங்காக இருக்கின்றது.

இந்த நிலைமையை இளைஞர்கள் மனதிலே கொள்ள வேண்டும். ஏனெனில் இளைஞர்களின் வாழ்க்கையை அநியாயம் ஆக்கிக் கொண்டிருக்கின்ற இந்த அரசியல் நடைமுறை தொடர்பாக அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here