யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டு வந்த முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தின் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.பல்கலைக்கழக வளாக முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் ஒன்றை அமைக்கும் பணிக கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.
எனினும் அந்த இடத்தில் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்மட்டத்தால் தடை ஏற்பட்டது.
இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்மட்டத்துக்கும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த 19ஆம் திகதி பேச்சுக்கள் இடம்பெற்றன.
இதில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகில் முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தை அமைக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்மட்டத்தினால் அறிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் அதற்கு இணக்கம் தெரிவித்து, பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாகத்தால் அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கப்பட்டு வந்தது.
எனினும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவாலய பணிகளை தற்போதுள்ள நிலையுடன் இடைநிறுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பணித்துள்ளது.
இந்த நிலையில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் நேற்று மாலையுடன் இடைநிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.