மே மாதம் நெருங்கி வருவதையொட்டி முள்ளி வாய்க்கால் நினைவேந்தல்கள் தொடர்பான கதையாடல்களும் ஆரம்பித்து விட்டன. தனித்தனியே நினைவேந்தல் நிகழ்வை நடத்தாமல், அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

இந்த நிகழ்வை ஒன்றிணைந்து நடத்துவதற்கு, கடைப்பிடிப்பதற்கு மேலாக அதனைத் தமிழ்த் தேசியத்துக்குப் புத்துயிர் ஊட்டும் நிகழ்வாக்கவும் வேண்டும் என்கிற கோரிக்கையையும் ஒன்றியம் முன்வைத்துள்ளது. இது ஒரு வரவேற்கப்படவேண்டிய அழைப்பு. அனைத்துத் தரப்புகளும் செவிசாய்த்து ஏற்றுக்கொண்டு செயற்படுத்த வேண்டியதொரு அழைப்பு. அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்ட நல்லதொரு முயற்சி என்றும் கூடச் சொல்லலாம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது மனிதப் பேரவலம் மட்டுமல்ல, நவீன இனப்படுகொலையின் அல்லது இனச்சுத்திகரிப்பின் அடையாளம். இன்று சிரியாவில் நடைபெற்று வருவதை இனச் சுத்திகரிப்பிற்கான பாடப் புத்தகம் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்கையில், அதற்கான பால பாடமாக அமைந்தது முள்ளிவாய்க்காலும் வன்னியில் நடந்த இறுதிப் போரும் தான் எனலாம்.

மனித உரிமைகளுக்கு விடுக்கப்பட்ட அதி உச்ச சவால் என்றும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை விவரிக்கலாம்.ஆனால், அதனை நினைவுகூருவதற்குக்கூடத் தமிழர்கள் அனுமதிக்கப்படாத காலம் ஒன்று இருந்தது. அதனைத் தாண்டி, முள்ளிவாய்க்காலில் அந்த நினைவுகூரலை நடத்துவதே ஒரு உரிமைப் போராட்டமாகத் தான் தொடங்கியது. எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழ்த் தேசியத்திற்குப் புத்துயிர் அளிக்கும் நிகழ்வாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு சரியானதும் நியாயமானதும் தான்.

2015ஆம் ஆண்டு முதலாவது நினைவேந்தல் வடக்கு மாகாண சபையால் ஏற்பாடு செய்யப்பட்டு முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட போது, கடுமையான இராணுவக் கெடுபிடி இருந்தது. அரசியல்வாதிகளைத் தவிர்த்து ஒரேயொரு பொதுமகன் கூட அனுமதிக்கப்படவில்லை. அத்தகைய நெருக்கடிக்கு மத்தியிலும் ஏற்றப்பட்ட சுடரே தமிழ் மக்களின் மனங்களில் தேசியமும் விடுதலை ஏக்கமும் பற்றியெறிவதற்கான சான்றாக விளங்கியது.

அந்தத் தீயைச் சுடர்விட்டு எரியச் செய்வதற்கு ஏதுவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான பொது அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அதுவொரு பேரெழுச்சி நிகழ்வாக அமைய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது ஆனால், தனிப்பட்ட கட்சி அரசியல் நோக்கங்களுக்காகவும், தனிப்பட்ட நபர்களின் அரசியல் நோக்கங்களுக்காகவும் அந்த நினைவு தினமும் நிகழ்வுகளும் பயன்படுத்தப்பட்டமையையே கண்டு வந்திருக்கின்றோம். கடந்த ஆண்டு நினைவிடம், ஓர் அரசியல் உட்பூசலுக்கான களமாக மாற்றியமைக்கப்பட்ட கொடுமையும்கூட நிகழ்ந்தது.

இத்தகையதொரு பின்னணியில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கையும் மிகக் கவனமாகக் கையாளப்படவேண்டிய ஒன்று. எந்தவொரு அரசியல் தரப்பின் கையும் ஓங்கிவிடாத படியான சரியானதொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதில் அரசியல் கலப்பும், அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது.

அதேபோன்று அந்த நிகழ்வைப் பயன்படுத்தி ஏதாவது ஒரு அரசியல் தரப்பு தனது நலன்களை விருத்தி செய்து கொள்ளவும் அனுமதிக்கக்கூடாது. இந்தக் அக்கறைகளோடு ஒவ்வொரு தமிழனும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நின்று தமது விடுதலை வேட்கையை வெளிப்படுத்தும் விதமான ஒரு நிகழ்வாக அது மாற்றியமைக்கப்பட வேண்டும். உள்நோக்கமற்ற தூய்மையான முயற்சியின் ஊடாக மட்டுமே அது சாத்தியமாகக் கூடும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here