பண மோசடியில் ஈடுபட்ட வங்கி ஒன்றில் கடமையாற்றிய பெண் கணக்காளர் ஒருவர் கேகாலையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பிரதேசத்திலுள்ள வங்கி ஒன்றில் கணக்காளராக பணியாற்றிய குறித்த பெண் அதே வங்கியில் 2 கோடியே 29 இலட்சத்து 41 ஆயிரத்து 349 ரூபாவை ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இவ்வாறு நேற்றுக் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த பெண் கணக்காளர் கடந்த 18 ஆம் திகதி டுபாயில் இருந்து நாடு திரும்பும் போது கட்டுநயாக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இருப்பினும் கைதுசெய்யப்பட்ட குறித்த பெண் அங்கிருந்து அன்றையதினமே தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், சந்தேக நபரான பெண் இருந்த பிரதேசம் அடையாளம் காணப்பட்டு அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
கம்பஹா – திமுது மாவத்தை பகுதியை சேர்ந்த 36 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் கைதுசெய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.