தமிழர்களின் இருப்பை பலப்படுத்தும் முக்கிய சபைகளில் ஒன்றாக காணப்படும் வவுனியா நகரசபையை பெரும்பான்மை கட்சிகளின் ஆதரவுடன் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியை கைப்பற்றியுள்ளதன் பின்னணியில், ஏதேனும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருக்கலாமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
வவுனியா நகரசபையின் தவிசாளராக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவரும், உப தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சார்ந்தவரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமையானது கூட்டாகவே சபையை நடத்துவதற்கு ஒரு ஒப்பந்தத்தை செய்திருப்பதாகவே தெரிகின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.
மொத்தம் 21 ஆசனங்களைக் கொண்டுள்ள வவுனியா நகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 8 ஆசனங்களையும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி 3 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.
எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, மஹிந்தவின் பொதுஜன பெரமுன மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி கைப்பற்றியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக, சமகால நடப்புகள் தொடர்பில் அலசி ஆராயும் ஆதவன் தொலைக்காட்சியின் நிலைவரம் நிகழ்ச்சியில் கலந்துரையாடப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வவுனியாவை பாதுகாத்து வந்ததில் கூட்டமைப்பிற்கு பாரிய பங்குண்டு. இந்நிலையில், வவுனியா, முல்லைத்தீவு ஆகியவற்றை குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி ஆட்சியமைத்துள்ளமை அதிருப்தியை ஏற்படுத்துவதாக சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் தாயகத்தில் பலமாக உள்ளவரை தென்னிலங்கை கட்சிகள் தமிழ் மக்களால் ஒதுக்கப்படும்.
அந்தவகையில், வடக்கு கிழக்கை சிறுக சிறுக கைப்பற்றுவதற்கு பயன்படுத்தப்படும் யுக்திகளே இவையென சித்தார்த்தன்சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பை வடக்கு கிழக்கில் பலவீனப்படுத்துவதன் மூலம் தமிழ் தேசிய உணர்வையும் தமிழ் தேசிய சக்தியையும் பலவீனப்படுத்திவிட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மூடி மறைத்துவிடலாமென தென்னிலங்கை கட்சிகள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
குறிப்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலர் விடும் தவறுகளும் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு காரணமென தெரிவித்த சித்தார்த்தன், அவற்றை திருத்திக்கொள்ளாவிட்டால் தென்னிலங்கை சக்திகள் சிறிது காலத்தில் பலமுடன் தமிழர் தாயக பகுதிக்கு வந்து முழுமையாக தமிழ் தேசிய உணர்வுகளை அழிப்பதற்கான சந்தர்ப்பத்தை நாங்களே கொடுத்ததாக அமைந்துவிடுமென எச்சரித்துள்ளார்.