முந்தலம் – கீரியன்கல்லி பிரதேசத்தில் துவிச்சக்கரவண்டி ஒன்று ஆற்றில் வீழ்ந்ததில் அதனை செலுத்திய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 7 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
உயிரிழந்துள்ள சிறுவன் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவருடன், திருமண நிகழ்வொன்றுக்காக தமது பெற்றோருடன் கீரியன்கல்லி பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை மேலும் சில நண்பர்களுடன் துவிச்சக்கரவண்டியை செலுத்தி விளையாடி கொண்டிருந்த வேளை, துவிச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத சிறுவன் அதனுடன் ஆற்றில் வீழ்ந்துள்ளார்.
பின்னர் ஏனைய சிறுவர்கள் இது தொடர்பில் அருகில் இருந்தவர்களுக்கு அறிவித்த நிலையில், ஆற்றில் விழுந்த சிறுவனை மீட்ட அவர்கள், முந்தலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலம், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகிறது.