இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கையில் வெளிநாட்டு கையிருப்பு மிக குறைந்த அளவிலேயே இருப்பதாக நிதி அமைச்சர் அண்மையில் நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில் அத்தியாவசிய பொருட்களுக்கு நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாளுக்கு நாள் பொருட்களின் விலைவாசியும் உயர்ந்தவண்ணமுள்ளது.

எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் பின்னணியில் நீண்ட நேரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் பொலிஸார் என பலரும் நாடு முழுவதும் களமிற்றக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவசர காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்ற வளாகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில், நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

அவசர காலச் சட்டம் என்றால் என்ன?

இயற்கை அனர்த்தம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் போன்ற நாட்டில் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில், அரசாங்கத்தினால் சாதாரண சட்டத்தின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என கருதும் போது, அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்படும்.

பாதுகாப்பு விடயங்கள், பொருளாதார விடயங்கள், இயற்கை அனர்த்தங்கள் போன்ற காரணிகளினால் அரசாங்கத்திற்கு சாதாரண சட்டங்களின் ஊடாக அதனை சமாளிக்க முடியாத நிலைமை வரும் போது, மேலதிகமான அடக்குமுறை சட்டமே, இந்த அவசரகால சட்டமாகும்.

ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டால் ஜனாதிபதி அவசரகாலச் சட்ட விதிகளின் படி ஒரு அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடு முழுவதிலுமோ அல்லது குறிப்பிட்ட பிதேசத்திலோ அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பார்.

அப்படியான அறிவித்தல் 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும். அதனை நாடாளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றவும் வேண்டும். கால நீடிப்பு நாடாளுமன்றத்தால் தேவை ஏற்பட்டால் தீர்மானம் மூலம் செய்யப்படும்.

இந்தக் காலத்தில் பத்திரிகைகள் பிரசுரங்கள் அரச அதிகாரியின் கட்டுப்பாட்டிற்கு உட்பட வேண்டும். மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படும். காவல்துறைக்கு சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கும் அதிகாரம் போன்றவை வழங்கப்படும்.

அவசர கால சட்டம் என்பது எவ்வளவு ஆபத்தானது

இலங்கையில் முதலாவது அவசரகால சட்டம் 1953இல் கொண்டுவரப்பட்டது, அதற்கான காரணம் 25 சதத்துக்கு இருந்த ஒரு கொத்து அரிசியை 70 சதமாக உயர்த்தப்பட்டமைக்கு எதிராக இடதுசாரிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டது.

அதன் பின்னர் சுமார் 15 முறைக்கு மேல் இது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டம் குறித்து நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடயம் வருமாறு,

நாட்டின் பாதுகாப்புக் கடமையிலுள்ள பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை ஆகிய தரப்பின் எந்தவொரு உறுப்பினராலும், எந்த நேரத்திலும் யாரையும் கைது செய்வதற்கான அதிகாரம் உண்டு.

ஒருவரை சந்தேக நபராக கருதுவதற்கான முடிவெடுக்கும் அதிகாரம், கடமையிலுள்ள எந்தவொரு ஆயுதம் தரித்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் அதிகாரம் உண்டு.கைதுக்கு முன்பதாக பின்னதான விசாரணை என்ற கதைக்கே இடமிராது. எந்த வழியிலும் கைது செய்வதற்கான அதிகாரம் உண்டு. இதன்போது யாராவது தப்பிப்பதற்கு முயன்றால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கான முழு அதிகாரமும் உண்டு.

கைது செய்யப்பட்டவர்களுக்கான விசாரணைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கட்டாயம் இலங்கையைப் பொறுத்தவரை இல்லை என்பது முக்கியமான விடயம்.

தேவை ஏற்படின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ் வைத்து விசாரிப்பதற்கான அதிகாரம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர்க்கு உண்டு.

இலங்கையில் நீண்டகாலம் விசாரணைகள் இல்லாமல் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள் அடங்குவோர் இந்த அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்குச் சட்டம் என்றால் என்ன?

ஊரடங்கு என்பது அசாதாரண பதட்டம் நிறைந்த சூழ்நிலைகளில் அரசு, பொலிஸார் நிலைமையினை கட்டுப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தும் சட்ட வரையறைக்குட்பட்ட உத்தரவாகும்.

பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி இல்லை. பொது இடங்களில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக கூட கூடாது. கலகம், கிளர்ச்சி அல்லது கலவரம் செய்வதைத் தூண்டும் நோக்கில் கூடுவதை தடுக்க இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

இன, சாதிக் கலவரங்கள், வன்முறை, சட்ட எதிர்ப்பு, நோய் பரவல், முன்பாதுகாப்பு போன்றவை நிகழும் போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.

ஊரடங்கும் – அவசர காலச் சட்டமும்

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரான காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும், ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக கடந்த 2020ம் ஆண்டு ஊரடங்க சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இலங்கையில் கோவிட் அச்ச சூழ்நிலை காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்தது.

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் இலங்கையில் முதல் முறையாக 1953ஆம் ஆண்டுகளில் ஒரு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, இலங்கையில் முதல் தடவையாக அவசர காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, அன்றைய தினமே முதன் முறையாக நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ அரிசியின் விலை 25 சதத்திலிருந்து 70 சதத்துக்கு உயர்த்தப்பட்டதையடுத்து அதனை எதிர்த்து இடதுசாரியினரால் கடையடைப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அவசரகாலச் சட்டம் 1953 செப்டம்பர் 11ம் திகதி வரை 29 நாட்கள் நடைமுறையில் இருந்தது.

அதன் பின்னர் இலங்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக 1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில், 1971ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி, 1983 ஜுலை கலவரம் போன்ற காலப்பகுதியில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால ஆயுதப் போராட்டத்தின் போது, இடைக்கிடை அவசர காலச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி வரை இந்த நிலை தொடர்ந்திருந்தது.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியுடன் 30 வருட கால ஆயுதப் போராட்டம் முடிவுக்குகொண்டுவரப்பட்டது. இலங்கையில் அதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட அவசர காலச் சட்டம் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் தளர்த்தப்பட்டது.

அப்போதிலிருந்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதும் தவிர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2014ம் ஆண்டு இடம்பெற்ற பேருவளை – அளுத்கம கலவரத்தின் போது சில தினங்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதன்பின்னர், 2018ம் ஆண்டு கண்டி நகரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவத்தின் போது அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து 2009ம் ஆண்டுக்கு பின்னர் அவசர காலச் சட்டத்தை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நடைமுறைப்படுத்தினார்.

அதன் பின்னர் ஊரடங்கு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அன்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சில வாரங்கள் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதன்பின்னர் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அவசர காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், பின்னர் நீக்கப்பட்டது.

மேலும், ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது போது, றம்புக்கண சம்பத்தின் போதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீளவும் அவசர காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here