இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு அருகில் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் தமது மனித உரிமைகளைப் பயன்படுத்தியதற்காக மட்டுமே தடுத்து வைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக குறைந்தபட்சம் 12 அமைதியான போராட்டக்காரர்கள் சட்ட விரோதமாக பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பிலேயே சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்திற்கு வெளியே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்ய போராட்டக்காரர்களுக்கு உரிமை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் சிதைந்துள்ளமையால்,, தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும், தங்கள் பிரதிநிதிகளுடன் பேசவும் அவர்களுக்கு உரிமையிருக்கிறது.

எனவே மனித உரிமைகளை அமைதியான முறையில் செயல்படுத்தியதற்காக மட்டுமே அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால், எதிர்ப்பாளர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட வேண்டும் என்று யாமினி மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார்.

கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும்,பாதுகாக்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும் மற்றும் நிறைவேற்ற வேண்டும்,

மேலும் மக்கள் தங்கள் மனித உரிமைகளை சுதந்திரமாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று மிஸ்ரா கோரியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று மேற்கொள்ளப்பட் கைதுகள் சந்தேகத்திற்கு இடமின்றி தன்னிச்சையானவை மற்றும் சட்டவிரோதமானவை என்று மிஸ்ரா விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் மிரிஹனவில் போராட்டக்காரர்களை அவர்கள் கைது செய்த பின்னர், இலங்கை அதிகாரிகள் அவர்களை பொலிஸ் காவலில் மோசமாக நடத்தினார்கள் மற்றும் சட்ட ஆலோசகரை அணுக அனுமதிக்க மறுத்தனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் இலங்கையின் கடமைகளை தெளிவாக பூர்த்தி செய்யவில்லை என்றும் மிஸ்ரா கூறியுள்ளார்

இலங்கை நாடாளுமன்றம் அருகே நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு இடையூறு விளைவித்ததாக 12 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here