இறக்குமதி செய்த ஒருவரை ஜனாதிபதியாக்கி மீண்டும் பித்தர்களாகத் தயாரில்லை: சரத் பொன்சேக்கா
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு தாம் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா களனியில் இன்று தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில், கட்சியின் தலைவரை வெற்றிபெறச் செய்யவே வாக்களிக்க வேண்டும் எனவும் இல்லாவிடின் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுடன் இருந்த அனுபவம் வாய்ந்த ஒருவரை கட்சித் தலைவர் பெயரிட வேண்டும் எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டார்.
கட்சிக்கு இறக்குமதி செய்த ஒருவரை ஜனாதிபதியாக்கி, மீண்டும் பித்தர்களைப் போன்று செயற்படத் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது, முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்கார வேட்பாளராகக் களமிறங்கினால் ஒத்துழைப்பு வழங்குவீர்களா என ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். எனினும், அரசியலை சரியாகச் செய்வார் என நான் நினைக்கவில்லை. அரசியலை புரிந்துகொள்ள எனக்கும் ஏழு, எட்டு வருடங்கள் தேவைப்பட்டன
என சரத் பொன்சேக்கா பதிலளித்தார்.