எர்லி வார்னிங் லேப்ஸ் (Early Warning Labs) என்ற நிறுவனம் நிலநடுக்கம் ஏற்படுவதை மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கும் செயலியை வடிமைத்துள்ளது. இதனால் இனி நிலநடுக்கம் ஏற்படுவதை நம்மால் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.இந்த செயலி சீஸ்மிக் (Seismic) சென்சார்கள் கொண்டு நில அதிர்வுகளை முன்னரே கண்டறிந்து, ஆப்பை இன்ஸ்டால் செய்த அனைவருக்கும் தகவல்களை அனுப்புகிறது. இந்த சென்சார்கள் எந்த இடத்தில் எப்போது நிலநடுக்கம் ஏற்படும், ரிக்டர் அளவுகோலில் அது எந்த அளவுக்கு இருக்கும் என்பது வரை கணித்துக் கூறி விடுகிறது.
பொதுவாக, நிலநடுக்கம் ஏற்படும்போது இரண்டு வகை அலைகள் வெளியேற்றப்படும். முதலில் நீள்வெட்டாக பயணிக்கும் அழுத்த அலைகள் (Pressure Waves) வெளியேறும். அது வெளியேறிய சில நொடிகளிலேயே சக்தி வாய்ந்த வெட்டு அலைகள் (Shear Waves) தாக்கும். இதுதான் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும். சேதமடையச் செய்யும். இந்த இரண்டு அலைகளுக்கும் குறைந்த பட்சம் ஒரு நிமிட இடைவெளி இருக்கும். முதல் அழுத்த அலைகள் வந்தவுடனேயே இந்த வார்னிங் மெசேஜ்கள் மக்களுக்குச் சென்றடைவதால், அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள போதுமான நேரம் கிடைக்கும். இந்த செயலி மாநில பொது அவசரநிலை பாதுகாப்பு அதிகாரிகள், உள்கட்டமைப்பு (எரிவாயு இணைப்புகள், சுரங்கப்பாதை அமைப்புகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்றவை), தனியார் நிறுவனங்கள் போன்றவற்றுக்குத் தகவல்களை அனுப்பி விடுகிறது. ஜப்பான், தைவான், மெக்ஸிகோ போன்ற ஒரு சில நாடுகளில், இத்தகைய முன்னெச்சரிக்கை செய்திகளை அனுப்பும் தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டு விட்டன. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மெக்ஸிகோவில் 8.1 என்ற அளவுக்கு நிலநடுக்கம் பதிவானபோது மக்கள் தங்களை காத்துக்கொள்ள 60 நொடிகள் இடைவெளி கிடைத்தது. இது மிகவும் குறைவான இடைவெளிதான் என்றாலும், முடிந்தளவு உயிர்களையாவது காத்துக்கொள்ள இது உதவும். இந்த ஆப் மட்டுமல்ல, இதேபோல நிறைய ஆப்கள் கூகுள் ப்ளேஸ்டோரில் கொட்டிக் கிடக்கின்றன. இது அலைகளை ஆராய்வதைப்போல வேறு சில ஆப்கள் நம் ஸ்மார்ட்போன்களில் உள்ள முடுக்க அளவியை (accelerometer) கொண்டு நிலநடுக்கம் குறித்த தகவல்களை முன்னரே தெரிந்துகொண்டு நம்மை எச்சரிக்கின்றன. இவற்றில் நம்பகமானவற்றைக் கண்டறிந்து பயன்படுத்தினால் நிலநடுக்கம் ஏற்படுத்தும் சேதங்களில் இருந்து ஓரளவிற்கேனும் தப்பிக்கலாம். |