இன்றைக்கு ஹோட்டலிலிருந்து ஐ.டி கம்பெனி வரை அனைத்து துறைகளிலும் கொம்ப்யூட்டர் பயன்பாடு அவசியமாகி விட்டது. பலருக்கும் கம்ப்யூட்டரோடு தான் வேலை என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.

இப்படிப்பட்டச் சூழலில் ‘எனக்கு கொம்ப்யூட்டர் வேண்டாம்’ என்று ஒதுங்கவும் முடியாது. சரி… இதற்கு என்னதான் தீர்வு?கண் மருத்துவர் திரிவேணி வெங்கடேஷ் விளக்கமளிக்கையில் கூறியதாவது,

கொம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இப்போது கண் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வது சர்வ சாதாரணமாகி விட்டது. அந்தப் பிரச்னைகளில் முக்கியமான ஒன்றுதான் ‘கொம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ அல்லது ‘டிரை ஐ சிண்ட்ரோம்’ (Dry Eye Syndrome) என்கிறோம்.

இது ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமானவை… கண் இமைகளை இமைக்காமல் இருப்பதும், கண் தசைகளில் ஏற்படும் அழுத்தமும் தான்.

உடலில் இரத்த ஓட்டம் செல்லாத ஒரே உறுப்பு கண் கருவிழி. உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஒக்ஸிஜன் இரத்தத்தின் மூலம் தான் கடத்தப்படுகிறது. ஆனால், இரத்த ஓட்டம் இல்லாததால் கருவிழிக்கு இரத்தத்தின் மூலம் ஒக்ஸிஜன் கிடைப்பதில்லை. கண்ணீர் மூலம் தான் கருவிழி நேரடியாக ஒக்சிஜனை எடுத்துக் கொள்கிறது. போதிய ஒக்ஸிஜன் கிடைக்காத நேரத்தில், கண்ணில் நீர் வற்றி விடும். அடிக்கடி கண்ணைச் சிமிட்டுவதன் மூலம் கண்ணீரைப் பெருக்கி, ஒக்ஸிஜனைப் பெறுகிறது கருவிழி.

கொம்ப்யூட்டர் மொனிட்டரை கூர்ந்து பார்க்கும் போது கண் சிமிட்டுவது இயல்பாகவே குறைந்து விடும். வழக்கமாக ஒரு நிமிடத்துக்கு 14-16 முறை கண் சிமிட்டுகிறோம். கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது ஐந்து அல்லது ஆறு முறை தான் சிமிட்டுகிறோம். இது கண்களில் அரிப்பு, கண் எரிச்சல், உறுத்தல், கண்கள் உலர்ந்து போதல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

சில நேரங்களில், கண்களில் மணல் விழுந்து உறுத்துவதுபோல ஓர் உணர்வையும் ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினைகள் இருந்தால், கண் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் செய்யப்படும் பரிசோதனையில் அடிப்படையாக ஒன்று உண்டு. சொட்டு மருந்தை (Lubricant drops) கண்களில் ஊற்றிக் கொள்ளச் சொல்வார்கள். பிரச்சினைக்கேற்ப குறிப்பிட்ட நேர இடைவெளியில் இதைக் கண்களில் ஊற்றிக் கொள்ள வேண்டும். இப்போது, சொட்டு மருந்துக்குப் பதிலாக, களிம்பு (Gel) வகை மருந்தும் வந்துவிட்டது.

மொனிட்டரை கவனியுங்கள்!

இந்தப் பிரச்சினை வராமல் தடுக்க, முதலில் கொம்ப்யூட்டர் மொனிட்டரை நம் பார்வைக்குக் கீழே இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, நேருக்கு நேராகப் பார்க்கும்படி மொனிட்டர் இருக்கக் கூடாது. மொனிட்டரின் வெளிச்சம் (Brightness) கண்களை உறுத்தும் வகையில் இருக்கக் கூடாது. சாதாரணமாக உங்களால் பார்க்க இயலும் சிறிய எழுத்தைவிட மூன்று மடங்கு பெரிதாக வைத்து மொனிட்டரைப் பயன்படுத்தலாம்.

கண்களுக்கும் மொனிட்டருக்கும் 35 செ.மீ இடைவெளியும், ஏற்கெனவே கண்ணாடி அணிந்திருப்பவர்கள் 80 செ.மீ வரை இடைவெளியும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

கண்கள்இமைக்க மறக்காதீர்கள்!

அடிக்கடி கண்களை மூடி, திறக்க வேண்டும். இதை வழக்கப்படுத்திக் கொள்ள கீபோர்ட்டில் நாம் அதிகமாகப் பயன்படுத்தும் என்டர் (Enter), ஸ்பேஸ் (Space), ஷிப்ட் ( Shift)… போன்ற ஏதாவது ஒன்றை அழுத்தும் போதெல்லாம் `ஒருமுறை கண் இமைக்க வேண்டும்’ எனப் பழக்கப்படுத்தி கொள்ளலாம்.

தூரமாக இருக்கும் பொருள்களைப் பார்க்கும் போது கண்களின் தசைகள் தளர்வடைந்து (ரிலாக்ஸாக) இருக்கும். அருகில் இருக்கும் பொருளைப் பார்க்கும் போது தான் கண்களின் தசைகள் வேகமாக இயங்கி, இறுக்கமடையும். எனவே, 20- 20- 20 என்ற விதியைப் பின்பற்ற வேண்டும். அதாவது 20 நிமிடங்களுக்கொருமுறை, 20 அடி தொலைவில் உள்ள ஏதோ ஒரு பொருளை 20 விநாடிகள் பார்க்க வேண்டும்.

கொம்ப்யூட்டர் கண்ணாடி பயன்படுத்துங்கள்!

மொனிட்டர் மூலம் வெளிப்படும் ஒளியைக் கட்டுப்படுத்தும் ‘ஆன்டி ரெப்ளெக்டிவ் கோட்டிங் ‘ (Anti-reflective coating) வகைக் கண்ணாடிகளை கொம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது அணிய வேண்டும். இந்த வகைக் கண்ணாடிகளை, பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் அவர்கள் அணியும் லென்ஸுடன் இணைத்துப் பயன்படுத்தலாம்.

ஏ.சி அறை… கவனம்!

ஏ.சி அறையில், காற்றில் ஈரப்பதம் குறைவாகவே இருக்கும். அதனால், விரைவில் கண் வறட்சி ஏற்பட்டு விடும். கொம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது கண்களைச் சிமிட்டுவது சில சமயங்களில் சிரமமாகி விடும். அவ்வப்போது, சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு இமைகளுக்குள் விழிகளைச் சுழற்ற வேண்டும்.

எழுந்து நடை போடுங்கள்!

கண் இமைகளைத் தேவையான அளவுக்கு அசைக்காத போது கண்களில் உள்ள தசைகள் இறுக்கம் அடைந்து விடும். அதனால் கண்களில் வலி ஏற்படும். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக, கொம்ப்யூட்டரை விட்டு எழுந்து சிறிது தூரம் நடந்து விட்டு வரலாம்.

வெளிச்சத்தில் கவனம்!

தலைக்கு மேல் இருந்து வரும் ஒளியோ, ஜன்னலில் இருந்து வரும் ஒளியோ உங்கள் கண்களில் நேரடியாகப் படக் கூடாது. அப்படி ஒருவேளை பட்டால் அதை உடனே மறைக்க வேண்டும். உங்களுக்குத் தொல்லை தரும் மின் விளக்குகளை அணைத்து விடலாம். அறை இருட்டாக இருந்து மொனிட்டர் மட்டும் வெளிச்சமாக இருந்தாலும் இந்தப் பிரச்சினை இருக்கும்’ என்கிறார் திரிவேணி வெங்கடேஷ்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here