ஐ.நா. சபை தீர்மானங்களை மீறி, உலக நாடுகளின் எதிர்ப்புக்கு இடையே 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வந்த வடகொரியா, இப்போது அவற்றை விட்டு விடுவதாக அறிவித்து உள்ளது.
கடந்த 21-ந் தேதி முதல் அந்த நாடு அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வந்து விடுவதாக அறிவித்து உள்ளது. இந்த மாதத்தில் வடகொரியாவின் புங்கியே-ரி அணு ஆயுத பரிசோதனை தளம் மூடப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, பரம எதிரிகளாக கருதப்பட்ட வடகொரியா- தென்கொரியா நாடுகளும் பரஸ்பரம் சமாதான முயற்சிக்கு முன்வந்தன. கடந்த சில தினங்களுக்கு முன், இரு கொரிய நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசிய உலக அளவில் தலைப்புச்செய்திகள் ஆகின.
இருநாடுகளும் உறவுகளை மேம்படுத்த ஒப்புக்கொண்டன. கொரிய பிரச்சினையை தீர்க்க கடும் முயற்சி மேற்கொண்டதாவும், இதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் குடியரசுக்கட்சியைச்சேர்ந்த 17 எம்.பிக்கள் முன்மொழிந்துள்ளனர்