படங்களை எப்போது வெளியிடுவது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் முறைப்படுத்தப்பட்டுள்ளது என்று நடிகர் விஷால் கூறினார் நடிகர் கார்த்திக்கும் அவரது மகன் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ள படம் ‘மிஸ்டர் சந்திரமவுலி.’ ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், சதீஷ், மகேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை திரு டைரக்டு செய்துள்ளார். தனஞ்செயன் தயாரித்து உள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் கலந்து கொண்டு பேசியதாவது:-
“தமிழ் திரையுலகை சீரமைக்கவும் ஒழுங்குபடுத்தவும் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் போராட்டம் நடத்தப்பட்டது. பட அதிபர்களும் தியேட்டர் அதிபர்களும் சம்பாதிப்பது முக்கியம். ஆனால் சம்பந்தம் இல்லாத மூன்றாவது நபர் ஏமாற்றி சம்பாதித்துக் கொண்டு இருந்ததைத்தான் எதிர்த்தோம்.
தற்போது அந்த வருமானம் தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. புதிய படங்களை திரைக்கு கொண்டு வருவதையும் ஒழுங்குபடுத்தி இருக்கிறோம். ஜூன் மாதம்வரை எந்தெந்த படங்களை எப்போது வெளியிடுவது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் முறைப்படுத்தப்பட்டு உள்ளது.
நடிகர்-நடிகைகளின் மானேஜர்கள் தயாரிப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு நடிகைகளை அழைத்து வரவேண்டும். டப்பிங் உள்ளிட்ட பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும். கச்சிதமான திட்டமிடலால் மிஸ்டர் சந்திரமவுலி படம் சிறப்பாக வந்துள்ளது.”
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, “கார்த்திக் படங்களை பார்த்துத்தான் காதலை கற்றுக்கொண்டோம். என் தங்கை பிருந்தாவுக்கு குழந்தை பருவத்தில் இருந்தே பாடகி ஆவது கனவு. இந்த படத்தில் அவள் பாடகி ஆகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
விழாவில் நடிகர் ஆர்யா, டைரக்டர்கள் கண்ணன், சுசீந்திரன், தயாரிப்பாளர்கள் தேனப்பன், எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன் உள்ளிட்ட பலர் பேசினார்கள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here