சமந்தாவின் வெற்றிக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. சமீபத்தில் டோலிவுட்டில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரணுடன் அவர் நடித்த ‘ரங்கஸ்தலம்’ வெளியான நான்கே நாட்களில் ரூ.100 கோடி வசூலைக் குவித்து பாக்ஸ் ஆபீஸையே மிரள வைத்திருக்கிறது. அமெரிக்காவிலும் கலெக்‌ஷன் அள்ளியிருக்கிறது. இதன் வழியாக சமந்தா நடிப்பில் வெளியான 8வது படம் நூறு ப்ளஸ் கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்திருக்கிறது! தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகையும் நிகழ்த்தாத சாதனை இது! திரையுலகைப் பொறுத்தவரை நடிகைகளின் மார்க்கெட் ரொம்பவே குறுகிய காலம்தான்.

அதிலும் அவர்கள் ‘பேச்சுல’ராக இருக்கும் வரைதான் மார்க்கெட், பேமென்ட் எல்லாம் உச்சத்தில் மிதக்கும். திருமணத்திற்குப் பின் அவர்களது மார்க்கெட் மவுசும், மினுமினுப்பும் மாயமாக மறைந்துவிடும். லைலா, மாளவிகா, ரீமாசென், சிம்ரன் என எக்கச்சக்க உதாரணங்களை நீங்களே சொல்லிவிடுவீர்கள். இச்சூழலில் பரபரவென பீக்கில் இருக்கும்போதே திருமணம் செய்து கொள்ளும் தைரியம், அவ்வளவு லேசில் எந்த நடிகைக்கும் வந்து விடாது. சமந்தா இதில் விதிவிலக்கு. மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே காதல் கணவர் நாக சைதன்யாவை கை பிடித்து இண்டஸ்ட்ரியையே ‘வாவ்வ்’ சொல்ல வைத்தார்.

இப்போது 8வது நூறு ப்ளஸ் கோடி ரூபாய் க்ளப்பின் ராணி! விஜய்யுடன் ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’, சூர்யாவுடன் ‘24’, ஜூனியர் என்டிஆருடன் ‘ஜனதா கேரேஜ்’, பவன் கல்யாணுடன் ‘அத்தாரென்டிகி தாரென்டி’, மகேஷ் பாபுவுடன் ‘தூக்குடு’, ராம் சரணுடன் ‘ரங்கஸ்தலம்’… என எல்லாமே வசூலில் ரூ.100 கோடியைத் தாண்டியவை! இதில் விஜய்யுடன் மட்டுமே அடுத்தடுத்து மூன்று படங்கள் என்பதும் மகுடத்தில் ஒரு வைரம்தான். குறிப்பாக ‘மெர்சல்’. ஏனெனில் திருமணம் கைகூடிய தருணத்தில் அவர் டூயட் பாடிய படம். எனவேதான் இப்பட ரிலீஸ் சமயத்தில் சமந்தாவிடம் யாரும் கேட்காத அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. ‘திருமணத்துக்குப் பிறகும் நடிப்பீங்களா?’ ‘‘நிச்சயமா.

கல்யாணமானா என் கேரியர்ல மாற்றம் பண்ணணுமா என்ன? தொடர்ந்து நடிப்பேன். படங்களும் வரிசையா ரிலீஸ் ஆகும்…’’ என்றார். சொன்னபடியே ‘ரங்கஸ்தலம்’ வெளியாகி ஹிட்டடித்திருக்கிறது. 1980களில் கோதாவரி ஆற்றங்கரையில் வாழும் கிராமத்துப் பெண்ணாக சமந்தா பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என படம் பார்த்த அனைவருமே கொண்டாடுகிறார்கள். இத்தனைக்கும் ஹனிமூன் கொண்டாடிய சூட்டோடு படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பதுதான் முக்கியம். இதற்கு அவர் சொன்ன காரணம் முக்கியமானது.

‘இன்னும் சில நாட்கள் ஹாலிடே விட்டிருக்கலாமே’ என ஷூட்டிங் ஸ்பாட்டில் கேட்கப்பட்ட கேள்விக்கு சமந்தா அளித்த பதில் இதுதான்: ‘‘ரெஸ்ட் எடுக்க எப்பவும் பிடிக்காது. பணம் மட்டுமே பிரதானம்னு நினைச்சு சினிமாவுல நடிக்கல. என் திறமையை மேலும் மேலும் மெருகேத்தணும். பட்டை தீட்டிக்கிட்டே இருக்கணும். அதுக்காகத்தான் ஓய்வே இல்லாம நடிக்கறேன். ஸ்கிரிப்ட்டையும் அதுக்கு ஏத்த மாதிரியே செலக்ட் செய்யறேன்..!’’ இப்போது புரிந்திருக்குமே… தென்னிந்திய நடிகைகளில் எப்படி சமந்தாவால் மட்டும் எட்டு நூறு ப்ளஸ் கோடி ரூபாய் வசூல் படங்களில் நடிக்க முடிந்தது என்று. இந்த எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரிக்கும் என்பதுதான் இப்போதைய நியூஸ்!

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here